இந்தியா

ஆந்திரம்: தெலுங்கு தேசம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக் கொலை: மாவோயிஸ்டுகள் வன்முறை

தினமணி

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும், முன்னாள் எம்எல்ஏவும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 ஆந்திரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக அமைதி நிலவி வந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வரா ராவ். அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அரக்கு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு தனித்தனி கார்களில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 துடாங்கி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவர்களின் கார்களை பெண்கள் உள்பட தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 50 பேர் வழிமறித்தனர். அவர்களில் சிலரிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. எம்எல்ஏவுடன் வந்த மெய்க்காவலர்கள், காரில் இருந்து இறங்கி வழிவிடுமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மாவோயிஸ்ட் இயக்கத்தினர், மெய்க்காவலர்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், சர்வேஸ்வரா ராவையும், சிவேரி சோமாவையும் கட்டி வைத்து, தலையிலும், மார்பிலும் துப்பாக்கியால் மாவோயிஸ்டுகள் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 பழங்குடிச் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் குடா கிராமத்தில், கருங்கல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்து எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ் நடத்தி வந்தார். அந்த குவாரிகளால் தங்களது வீடுகள் சேதமடைவதாக அங்கு குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூலை மாதம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனிடையே, மக்கள் விரோதச் செயல்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அண்மையில் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது போதிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றும், அந்தப் பயணத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 எனினும், முன்னெச்சரிக்கையின்றி அங்கு சென்றதால், இந்த சோக சம்பவம் நேரிட்டது என்று காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
 இதனிடையே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்கா சென்றுவிட்டதால், அவரது அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.
 இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு துணை முதல்வர் என்.சின்ன ராஜப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். அவரும், காவல் துறை டிஜிபி ஹரீஷ் குமார் குப்தாவும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
 ஆந்திரம்-ஒடிஸா எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராமகிருஷ்ணா என்பவரது தலைமையிலான மாவோயிஸ்டு குழுவினர், இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது என்று விசாகப்பட்டினம் சரக டிஐஜி ஸ்ரீகாந்த் கூறினார்.
 கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் அரக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்வேஸ்வர ராவ், கடந்த 2016-ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். சிவேரி சோமா, கடந்த 2009-2014 வரை, அரக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.
 காவல் நிலையங்கள் சூறை: இதனிடையே, எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏவின் படுகொலைக்கு குற்றம்சாட்டி, அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் புகுந்து பழங்குடியினர் சூறையாடினர்.
 எம்எல்ஏவுக்கும், முன்னாள் எம்எல்ஏவுக்கும் போதிய பாதுகாப்பு வழங்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT