உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்: காரை நிறுத்தாததால் ஆப்பிள் நிறுவன ஊழியரை சுட்டுக் கொன்ற காவலர்
உத்தரப்பிரதேசத்தில் காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் திவாரி என்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் கோம்தி நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது, காவல்துறையினர் அவரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் விவேக் திவாரி காரை நிறுத்தாததால், கார் மீது காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்த போது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது. படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
Advertisement
இது பற்றிய முதற்கட்ட விசாரணையில், விவேக் திவாரியை காரை நிறுத்துமாறு கூறிய போது அவர் தலைமைக் காவலரின் இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதுவது போல பாசாங்கு செய்ததும், அதனால் அதிர்ச்சியுற்ற காவலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தாரா அல்லது விபத்தில் சிக்கி காயமடைந்ததால் இறந்தாரா என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி விவேக் திவாரியின் மனைவி கல்பனா திவாரி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.