இந்தியா

ம.பி. முதல்வர் கமல்நாத் தொடர்புடையவர்களிடம் 2-ஆவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

ANI

மத்தியப் பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரது வீடுகள், அலுவலகங்கள் உள்பட 52 இடங்களில் வருமான வரித்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினர்.

வருமான வரி ஏய்ப்பு, தேர்தலில் ஹவாலா பணப்புழக்கம் ஆகிய புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர், போபால் மற்றும் தில்லி உள்ளிட்ட இடங்களில், 200 அதிகாரிகளைக் கொண்ட வருமான வரித்துறைக் குழுவினர் நடத்திய இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ.14 கோடி வரை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கமல்நாத்தின் தனிப்பாதுகாப்புப் பிரிவு முன்னாள் அதிகாரியான பிரவீண் கக்கத், முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானி மற்றும் கமல்நாத்தின் உறவினருக்குச் சொந்தமான "மோசர் பாயர்' நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், மற்றொரு உறவினர் ரதுல் புரி உள்ளிட்டோரின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில், கக்கத், மிக்லானி ஆகிய இரு அதிகாரிகளும், மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் தங்கள் பணிகளை ராஜிநாமா செய்தவர்களாவர். குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, கமல்நாத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கக்கத் நியமிக்கப்பட்டிருந்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய மத்திய அமைச்சரான காந்திலால் பூரியாவுக்கும் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக கக்கத் பணியாற்றியிருக்கிறார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராட்லாம் - ஜாபுவா மக்களவைத் தொகுதியில் காந்திலால் பூரியா போட்டியிடுகிறார். கக்கத்தின் உதவியாளர் பிரதீக் ஜோஷியின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு, கட்டு கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

முதல்வர் கமல்நாத்தின் மிக நெருங்கிய உறவினரான ரதுல் புரியிடம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தில்லியில் சமீபத்தில்தான் விசாரணை நடத்தி முடித்திருந்தனர். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், பிரவீண் கக்கத் உதவியாளரான அஸ்வின் ஷர்மா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கக்கத் வீட்டிலும் இந்த சோதனை தொடர்கிறது. இதையடுத்து சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT