இந்தியா

கருப்புப் பண வழக்கு: ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

DIN

கணக்கில் வராத சொத்து குறித்த கருப்புப் பண வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்துகளின் விவரங்களையும், வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், வருமான வரிக் கணக்கில் குறிப்பிடவில்லை என்று புகார் எழுந்தது.
 இதையடுத்து, பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில், அவர்கள் மூவரும் கூட்டாக வாங்கிய ரூ.5.37 கோடி மதிப்பிலான சொத்துகளின் விவரங்களை வெளியிடவில்லை எனக் கூறி, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை குற்றவியல் வழக்கு பதிவு செய்தது.
 இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மூவர் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி உத்தரவிட்டது.
 இதை எதிர்த்து, வருமான வரித் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ""சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, கருப்புப் பண வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற நபர்களும், குற்றவியல் விசாரணையை எதிர்த்து வழக்கு தொடர வழிவகுக்கும். எனவே, அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
 இதைக் கேட்ட நீதிபதிகள், ""வருமான வரித் துறையின் வாதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது'' என்றனர்.
 இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கக் கோரி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT