இந்தியா

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தா? - தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது

DIN

துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த், வேலுார் மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடுகிறார். துரைமுருகன் வீட்டில், வாக்குக்காக வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், மார்ச் 30 ஆம் தேதி, காட்பாடி பகுதியில் உள்ள துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீடுகளில் தேர்தல் செலவினப் பார்வையாளர் உஜ்வல்குமார் தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, காட்பாடி அருகே வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக  விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி விஜயாவுக்குச் சொந்தமான வீடு, சிமெண்ட் கிடங்கில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டன.
 
பெரும்பாலும் 200 ரூபாய் நோட்டுகளாக இருந்த அந்தப் பணக்கட்டுகளில் ஊர் பெயர், வார்டு எண் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருந்ததால் அவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

வருமானவரித்துறையினரின் முதற்கட்ட சோதனையில் ரூ. 10 லட்சம் ரொக்கமும், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த இரண்டாம் கட்ட சோதனையில் ரூ. 11.48 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார். 

துணை ராணுவப் பாதுகாப்புடன் பணக்கட்டுகள் முழுவதுமாக எண்ணப்பட்டு அவற்றின் வரிசை எண்களும் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அந்தப் பணக்கட்டுகள் 14 அட்டைப்பெட்டிகளில் நிரப்பப்பட்டு துணை ராணுவ பாதுகாப்புடன் சிற்றுந்தில் ஏற்றி சென்னை வருமானவரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பணக்கட்டுகளுடன் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் 2 பைகளில் கொண்டு செல்லப்பட்டன. 

இதனிடையே, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வருமானவரித் துறையினரிடம் கேட்டதற்கு, அந்தப் பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று துரைமுருகன் தெரிவித்திருந்தார். 

இது குறித்து, வருமான வரித்துறையினர், தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அளித்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர், போலீசார் ஆகியோர் தனித்தனியே அறிக்கை அளித்தனர். அவற்றின் அடிப்படையில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அனுப்பினார்.

வேலுார் தொகுதியில், பட்டுவாடா துவங்குவதற்கு முன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், தேர்தலை ரத்து செய்யலாமா, வேண்டாமா என்று, தேர்தல் ஆணையம் சார்பில், தில்லியில் ஆலோசனை நடந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு, வேலுார் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்த தடை விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஒருவேளை, வேலுார் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுமானால், அதில் அடங்கிய, குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷேய்பாலி ஷரண் இதைத் தெரிவித்துள்ளார். 

No order issued for cancellation of LS polls in Vellore: ECI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT