முகப்பு
இந்தியா

சசி தரூரின் பிரமாணப் பத்திரத்தை ஆராய்ந்ததில் திடுக்கிட வைத்த எழுத்துப் பிழைகள்!

சசி தரூர், இவருக்கும் தமிழர்களுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல்வேறு பரபரப்பான செய்திகளால் இவர் நமக்கும் அறிந்தவராகவே உள்ளார்.

Updated On : 19 ஏப்ரல், 2019 at 6:11 PM
பகிர்:


சசி தரூர், இவருக்கும் தமிழர்களுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல்வேறு பரபரப்பான செய்திகளால் இவர் நமக்கும் அறிந்தவராகவே உள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளராக இவர் போட்டியிடுகிறார். தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தார்.

இவரது பிரமாணப் பத்திரத்தை தூசு தட்டிப் பார்த்ததில் நமக்கு ஏதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைக்குமா என்றால் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. சரி சிறியதாகவாவது ஏதாவது என்று தேடியபோதுதான் கிடைத்தது எழுத்துப் பிழைகள்.

Advertisement

இதெல்லாம் விஷயமா என்றால்.. அப்படி ஒன்றும் லேசான ஒன்றிரண்டு எழுத்துப் பிழை இல்லை. அவரது பெயர் முதல்... ஊர் வரை.. எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. அதனால்தான் உங்களுக்குச் சொல்லிவிடலாம் என்று இங்கே எழுதிவிட்டோம்.

பிரமாணப் பத்திரத்துடன் அவர் 3 தாள்களை இணைத்துள்ளார். அதன் முதல் பாராவிலேயே சசி தரூர் என்ற அவரது பெயருக்கு பதிலாக “Shahi Tharoor” என்று எழுதப்பட்டுள்ளது.

அடுத்த பக்கத்தில், அவரது கட்சிப் பெயர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்பது, “Indian Nationa Congress” என்று எல் என்ற ஆங்கில எழுத்து இல்லாமல் இருக்கிறது.

சரி இதெல்லாம் சாதாரணமப்பா என்று நினைத்துக் கொண்டு அவரது கல்வித் தகுதியைப் பார்த்தால், “PhD Law and Diplomacy - Flecher School of Law and Diplomacy” என்று இருந்தது. உண்மையில் இது “The Fletcher School of Law and Diplomacy” என்று இருக்க வேண்டுமாம். அட போங்கப்பா என்று நினைத்துக் கொண்டு அடுத்த பக்கத்தை புரட்டினோம்.

அவர் வசிக்கும் இடத்தின் முகவரி தான் அடுத்தது. அதாவது வழுதசௌத் என்பதுதான் அந்த பெயர். ஆங்கிலத்தில் இப்படி அழைக்கலாம்“Vazhuthacadu”. ஆனால் இந்த பெயர் சில இடங்களில் “Vazhthacadu” என்றும், வேறொரு இடத்தில் “Vazuthacadu” என்றும் உள்ளது.

GJ Condor Marigold. இதுதான் அவரது குடியிருப்பின் பெயர். இதைக் கூட ஒழுங்காக எழுதாமல், “Mary Gold” என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட Thiruvananthapuram (திருவனந்தபுரம்) இதைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. இதனை “Thiruvanthpuram” என்று எழுதித் தொலைத்துள்ளார்.

இது குறித்து கேட்டால், அவரது பிரமாணப் பத்திரத்தை தயார் செய்த ஊழியர்கள்தான் இந்த தவறை செய்திருப்பார்கள். தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்ததால் அவர் முழுவதும் படிக்காமல் கையெழுத்திட்டிருப்பார் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் உடன் இருப்பவர்கள்.

இதெல்லாம் ஒரு ஆங்கில ஆசிரியரின் கையில் கிடைத்தால் நிச்சயம் முட்டை மார்க் தான் கிடைக்கும் சசி தரூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.