அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக மாயாவதி பிரசாரம்: யோகி ஆதித்யநாத் காட்டம்
அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமரிசித்துள்ளார்.
பிஜ்நோர்: அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமரிசித்துள்ளார்.
அரசியலில் இரு துருவங்களாக இருந்த சமாஜவாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதை விமரிசித்து யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நீங்களே பார்க்கலாம், அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது என்பதை. அம்பேத்ரை அவமதித்தவர்களுக்காக மாயாவதி தேர்தல் பிரசாரம் செய்கிறார். யார் இந்தியாவை மதிக்கவில்லையோ அவர்களுக்கு வாக்குகளைப் பெறவே தகுதியில்லை என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், நாட்டில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் போது பிரதமர் மோடி ஜாதியையோ, மதத்தையோ கவனத்தில் கொண்டதில்லை. அவர் எப்போதுமே வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது, எல்லோராலும் சேர்ந்து பெறுவது என்பதையே மந்திரமாகக் கொண்டுள்ளார் என்று கூறினார்.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக, பகுஜன்சமாஜ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மைன்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங் யாதவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, அந்த தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மாயாவதி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.