இந்தியா

காஷ்மீர்: தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடுகள் தளர்வு

DIN

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கு பொதுமக்களும், வர்த்தகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வாரத்தின் இரு நாள்கள் என்பதிலிருந்து ஒரு நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இனி, அந்த நெடுஞ்சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பொதுப் போக்குவரத்துக்குத் தடை இருக்கும். புதன்கிழமைகளில் அந்த நெடுஞ்சாலையை பொதுமக்கள் வழக்கம்போல் பயன்படுத்தலாம்.
பாரமுல்லா மற்றும் ஜம்முவில் கடந்த 11-ஆம் தேதியும், ஸ்ரீநகர் மற்றும் உதாம்பூரில் கடந்த 18-ஆம் தேதியும் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இத்தகைய சூழல்களையும், ராணுவப் போக்குவரத்துத் தேவைகளையும் மனதில் கொண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தேர்தலுக்குப் பிறகு நிலவரத்தை முழுமையாக ஆராய்ந்து, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்படும்.
பொதுப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நேரங்களில் கூட, பொதுமக்களின் வசதிக்காக அனுமதி பெற்ற பொது வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் அனுமதிப்படுகின்றன என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியிலுள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் பயணத்துக்கு எந்தவித இடையூறும் நேரக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, ஜம்முவுக்கும், ஸ்ரீநகருக்கும் இடையேயான 270 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாகக் கடந்த 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை மே மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் எவரும் பயணம் செய்யாததால், பொதுப் போக்குவரத்துக்காக அந்த நெடுஞ்சாலை  கடந்த புதன்கிழமை  திறக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT