இந்தியா

தலைமை நீதிபதிக்கு எதிரான சதி?: விசாரணை நீதிபதி நியமனம்

DIN

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான சதி புகார் குறித்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்குவதில் வெளியாட்களின் தலையீடு குறித்தும் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் தனி நபர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
பணபலம் படைத்தவர்களும், அரசியல் பலம் கொண்டவர்களும் "நெருப்புடன் விளையாட வேண்டாம்' என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. 
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிமன்ற அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்திருந்தார். இந்த அமர்வில், நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெறுவர் என நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட, ரூ.1.5 கோடி வரை தருவதற்கு சிலர் பேரம் பேசியதாகவும், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கும் நடைமுறையில் குறிப்பிட்ட சிலரின் தலையீடு இருப்பதாகவும், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ், கடந்த திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ், தனது கூடுதல் பிரமாணப் பத்திரத்தை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். மேலும், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்களைப் பொதுவில் வெளியிடும்போது தனது அனுமதியைப் பெறும் வகையில், தனக்குத் "தனியுரிமை' வழங்க வேண்டும் என்றும் பைன்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார். 
"தனியுரிமை' கோர முடியாது: இதன்பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்குரைஞரின் கோரிக்கை குறித்து, அரசு தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கே.கே.வேணுகோபால், ""இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். எனவே, தனியுரிமை எதையும் அவர் கோர முடியாது'' என்றார். மூத்த வழக்குரைஞரும், உச்சநீதிமன்ற பார் அசோஸியேஷன் தலைவருமான ராகேஷ் கன்னா கூறுகையில், ""இந்த வழக்கில், எந்தவித ஆவணங்களையும் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே, பைன்ஸ் இதில் தனியுரிமை கோர முடியாது'' என்றார்.
நீதித்துறைக்குப் பெரும் ஆபத்து: இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தாமல், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
நீதித்துறையைக் கடந்த சில ஆண்டுகளாக, தவறான கண்ணோட்டத்துடன் சிலர் அணுகி வருகின்றனர். நீதித்துறையைக் கட்டுப்படுத்தி, அதன்மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்த அவர்கள் முயன்று வருகின்றனர். இது மிகவும் வேதனை தருகிறது. நீதித்துறைக்குப் பின்புறம் பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. அவையனைத்தையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், நீதித்துறைக்குப் பெரும் ஆபத்து நேர்ந்துவிடும்.
"நெருப்புடன் விளையாட வேண்டாம்': பணக்காரர்களும், பலம்வாய்ந்த பின்புலம் கொண்டவர்களும் உச்சநீதிமன்றத்தை "ரிமோட்' மூலம் இயக்கிவிடலாம் என்று நினைக்கின்றனரா? "பணபலத்தினாலோ அல்லது அரசியல் பலத்தினாலோ உச்சநீதிமன்றத்தைக் கட்டுப்படுத்திவிடலாம்' என்று எவரும் நினைக்க வேண்டாம். நெருப்புடன் விளையாடுவதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீதித்துறையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் எங்களைக் கட்டுப்படுத்த சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 4 முதல் 5 சதவீதமே உள்ள அவர்கள், நீதித்துறை முழுமைக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். பல சிறந்த நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் இந்த நீதித்துறையைக் கட்டமைத்துள்ளனர். ஆனால், தற்போது நீதித்துறையைக் கட்டுப்படுத்த சிலர் முயன்று வருவதாக வெளியாகும் செய்திகள், மிகுந்த கவலையளிக்கின்றன.
தனிநபர் குழு: இந்த விவகாரத்தில் வழக்குரைஞர் பைன்ஸின் குற்றச்சாட்டை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான தனிநபர் குழுவை அமைக்கிறோம். அவர், பைன்ஸ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை மட்டுமே ஆராய்வார். தலைமை நீதிபதிக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து அவர் விசாரணை ஏதும் நடத்தமாட்டார். அவருக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), நுண்ணறிவு பிரிவு (ஐபி), தில்லி காவல்துறை ஆகிய அமைப்புகளின் இயக்குநர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வர்.  
விரிவான விசாரணை: விசாரணையை முடித்தபிறகு, அது குறித்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பிறகு இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெறும். பைன்ஸ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை மூடி முத்திரையிட்ட உறையில் ஏ.கே.பட்நாயக்கிடம் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். 
இந்த விவகாரத்தில், "தனியுரிமை' கோரும் வழக்குரைஞரின் கோரிக்கையை ஏற்க முடியாது.  தனிநபர் குழு கேட்கும் தகவல்களை வேண்டிய நேரத்தில் அவர் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT