இந்தியா

4-ஆம் கட்டத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் தூக்கம் இழந்துவிட்டன: பிரதமர் மோடி

DIN


மக்களவை 4-ஆம் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் தூக்கம் இழந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாராபங்கி, பாக்ரியாச் ஆகிய  பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
4ஆம் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, கலப்பட கூட்டணியை ஏற்படுத்தியவர்கள் தூக்கத்தை இழந்து விட்டனர். 4ஆவது கட்டத் தேர்தலுக்கு முன்பு, யார் பிரதமராக பதவியேற்பது? என்ற விளையாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் 4ஆவது கட்டத் தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.


50 முதல் 55 தொகுதிகளில் வென்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தலைவரை அளிக்க முடியாத கட்சிகள், தற்போது பிரதமருக்கான உடைகளை தைத்து வருகின்றன. மத்தியில் கலவையான அரசு, பலவீனமான அரசு அமைவதையே அக்கட்சிகள் விரும்புகின்றன. 
அப்போதுதான் பிரதமராகும் தங்களது கனவு நனவாகும் என நினைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஒரு பிரதமரை தேர்வு செய்யலாம் என கருதுகின்றன. தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் தொகைகளை காப்பாற்றவே, கலப்பட கூட்டணி கட்சியினர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் தயாராகி விட்டனர். 
ஆனால் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு எதிர்க்கட்சியினருக்கு கிடைக்குமா? என்பதுதான் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு எக்கட்சிக்கும் கிடைக்கவில்லை. 2019ஆம் ஆண்டில் மக்கள் ஆத்திரத்தில்தான் இருக்கின்றனர். அதனால் 2019ஆம் ஆண்டிலும் அந்த வாய்ப்பு கிடைக்காது.


மத்திய அரசு எந்தவித பாகுபாடும் இல்லாமல் பணியாற்றி வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆட்சியிலிருந்த பகுஜன் சமாஜ், சமாஜவாதி அரசுகள், பாகுபாடுடனேயே செயல்பட்டன. மக்களுக்கு அக்கட்சிகள் அநீதி இழைத்தன. தங்களது கட்சிகளுக்கு வாக்களிக்காத பகுதிகளுக்கு மின்சார வசதியை அக்கட்சிகள் செய்து கொடுக்கவில்லை. ஆனால் பாஜகதான், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பணியாற்றியது.
சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது பாருங்கள், தாங்கள் முழுவதும் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அக்கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. சுயநல நோக்கங்களுக்காகவே அக்கட்சிகள் கைகோர்த்துள்ளன. அக்கூட்டணியும் மே மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு நீடிக்காது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 23ஆம் தேதியன்று, அக்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொண்டிருக்கும்.


பாதுகாப்பு படைகளுக்கு மத்திய பாஜக அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது. இதனால்தான், பயங்கரவாதத்தை குறுகிய பகுதிக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இதனால்தான் கோயில்கள், வணிக மையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில்வே நிலையங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளிவருவதில்லை. மோடி மீதுள்ள அச்சத்தால்தான், இது நிறுத்தப்பட்டுள்ளது. ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த ஆபத்து முழுவதும் நீங்கிவிடவில்லை. நம்மை சுற்றிலும் பயங்கரவாத தளங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதை சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா?


காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான், நாட்டில் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் அதிகரித்தன. பயங்கரவாதத்துக்கு நமது நாட்டு மக்களின் உயிர்கள் மட்டும் பறிபோகவில்லை. தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், யாரும் பெரியவரும் கிடையாது; சிறியவரும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இந்த கண்ணோட்டத்தில்தான் மத்திய அரசு பணியாற்றியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதே பாதையில்தான் மத்திய அரசு பயணிக்கும் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT