இந்தியா

இன்று வரை எதுவும் இல்லை, நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது: காஷ்மீர் ஆளுநர்

DIN


காஷ்மீரில் இயல்பு நிலையே நிலவுவதாகவும், ஒரு சில அரசியல் கட்சிகளே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் அரசும் அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளை விரைவில் திரும்புமாறு அறிவுறுத்தியது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், அந்த நாட்டு குடிமக்களை காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே, காஷ்மீரில் 15 ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று (சனிக்கிழமை) மாலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். 

ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து எழுப்பிய கேள்விக்கு, "வெறும் வதந்திகள் மட்டுமே கிளப்பிவிடப்படுகிறது. இயல்பான விஷயங்களே இங்கு அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஒரு சில அரசியல் கட்சிகள் சொந்த நலனுக்காக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்" என்றார். 

ஒமர் அப்துல்லாவுடனான சந்திப்பு குறித்து பேசிய ஆளுநர், "அவர்கள் திருப்தியடைந்துள்ளனர். அவர்கள் என்னிடம் இருந்து எதிர்பார்த்ததை நான் செய்துவிட்டேன். என் அறிவுக்கு எட்டியவரை, இங்கு எதுவும் நடக்கப்போவதாக தெரியவில்லை. நாளை என்ன நடக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. அது என் கையில் இல்லை. ஆனால், இன்று வரை வருத்தமடையும் அளவுக்கு எதுவும் நடைபெறவில்லை" என்றார். 

பாதுகாப்பு குறித்து பதிலளித்த அவர், "யாத்திரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பது எங்களது பொறுப்பாகும். பல்வேறு பயங்கரவாதிகள் எல்லையைக் கடப்பதற்கு காத்திருக்கின்றனர். அவர்களுள் பெரும்பாலானோர் தற்கொலைப் படை பயங்கரவாதிகள். ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், அதன் தாக்கம் ஒட்டுமொத்த நாடு முழுவதும் நிலவும். நாங்கள் அதைத் தவிர்க்க விரும்புகிறோம்" என்றார். 

காஷ்மீர் பதற்ற நிலை குறித்து பேசிய அவர், "தில்லியில் அனைவரிடமும் நான் பேசினேன். யாரும் நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று எந்த குறிப்பையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. சிலர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்கின்றனர். சிலர் சட்டப்பிரிவு 35 ஏ மற்றும் 370 குறித்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து யாரும் என்னிடமோ, பிரதமரிடமோ அல்லது உள்துறை அமைச்சரிடமோ ஆலோசிக்கவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT