இந்தியா

"காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருப்போம்": 2 வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

DIN


ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக்கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (செவ்வாய்கிழமை) விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது. 

இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், 

"ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாள்தோறும் அங்கு நிலவும் சூழலைக் கண்காணித்து வருகிறோம்" என்றார். மேலும், ஜூலை 2016 பயங்கரவாதி புர்ஹான் வாணி கொல்லப்பட்டத்போது அங்கு நிலவிய சூழலை சுட்டிக்காட்டிய அட்டர்னி ஜெனரல், "பயங்கரவாதி புர்ஹான் வாணி கொல்லப்பட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், மாநிலத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர 3 மாத காலம் தேவைப்பட்டது" என்றார். 

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த விசாரணையின்போது தெரிவிக்கையில், 

"அங்கு நிலவும் உண்மையான சூழல் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. இயல்பு நிலை திரும்புவதற்கு சற்று நேரம் வழங்க வேண்டும். காஷ்மீர் சூழலை மத்திய அரசு தினந்தோறும் கண்காணித்து வருகிறது. இயல்பு நிலைக்கு கொண்டுவருவது அரசு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளாகும். ஒருவேளை ஜம்மு காஷ்மீரில் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு. அதனால், இயல்பு நிலையை கொண்டுவருவதற்கான நியாயமான நேரத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்" என்றனர். மேலும் மனுதாரரின் வழக்கறிஞரான மேனகா குருசாமியிடம், "நீங்கள் ஏதேனும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டால், அது குறித்து தீர்வு காண அறிவுறுத்துவோம்" என்றனர். இதையடுத்து, அட்டர்னி ஜெனரலிடம், "இயல்பு நிலைக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்" என்று கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல், "பொது மக்களுக்கு குறைந்த அளவிலான இன்னல்கள் மட்டுமே ஏற்படுகிறது என்கிற சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது முதலியவற்றை உறுதி செய்ய வேண்டும். துணை ராணுவப் படைகள் நிறைய ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார். 

இதனிடையே மேனகா குருசாமி, "தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு இருக்கும் மக்களால் பண்டிகை தினங்களில் கூட பேச முடியவில்லை" என்றார். 

இதற்குப் பதிலளித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, "ஒரே இரவில் எதுவும் நடந்துவிடாது. அங்கு முக்கியப் பிரச்னைகள் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரிய வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். யாரும் உயிரிழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதுதான் தற்போதைய சூழலில் முக்கியம்" என்றனர். 

இதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல், "வன்முறையோ, மனித உரிமை மீறலோ எதுவும் நிகழவில்லை என்று அரசு உறுதியளிக்கிறது. 2016 ஜூலை மாதம் 47 பேர் உயிரிழந்தனர். ஆனால், இன்று வரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை" என்றார்.          

இதையடுத்து, இந்த வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், "மக்களின் விடுதலைக்கான உங்களது விவகாரத்தில் நாங்களும் உடன் இருக்கிறோம். ஆனால், நமக்கு தெளிவான பார்வை வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருப்போம்" என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT