இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் இல்லை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

DIN

பாகிஸ்தானின் முயற்சிக்குப் பின்னடைவு
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால், காஷ்மீர் விவகாரத்தை வைத்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளைத் திரட்டும் பாகிஸ்தானின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்றும் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்கி, இந்தியாவுக்கு எதிராக மற்ற நாடுகளை அணி திரட்ட பாகிஸ்தான் முயற்சித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், காஷ்மீரை இந்தியா அடக்குமுறைக்குள் வைத்துள்ளதாகவும் அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு டிரம்பைச் சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இது தொடர்பாக தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் டிரம்ப் கூறியதையும், இந்த நேரத்தில் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், இதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் பிரதமர் மோடி, டிரம்பிடம் முன்வைக்கவில்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. டிரம்ப்பின் இந்த முரணான பேச்சு அமெரிக்கத் தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துவிட்டார். இதனை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ்வர்த்தன் சிருங்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். இப்போது, இந்தியா அதனை ஏற்காத நிலையில், இனி காஷ்மீர் விவகாரத்தில் நான் தலையிடப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெளிவுபடக் கூறிவிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பதுதான் அமெரிக்கா நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் கொள்கை. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டும் பேச்சு நடத்தி பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அமெரிக்கா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது என்றார்.
இதன் மூலம், அமெரிக்க அதிபர் டிரம்ப், இனி காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இது இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாடாகும். ஏனெனில், காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் ஒரு பகுதி; அது தொடர்பாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தொடர்ந்து தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தானுக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.
ஏனெனில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வைத்து, இந்தியாவுக்கு எதிராக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அணிதிரட்டலாம் என்று பாகிஸ்தான் முயற்சித்து வந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி சில நாள்களுக்கு முன்பு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். எனினும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளிக்கவில்லை. மேலும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு தரப்பில் உள்ள கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக உருவெடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அவர் சீனத் தரப்பிடம் வலியுறுத்தினார்.
மேலும், ஐ.நா. சபையும் காஷ்மீர் பிரச்னையில் தலையிட மறுத்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் பேச்சு நடத்தி பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துவிட்டார். இதனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. நான் ஜம்மு-காஷ்மீர் என்று சொன்னால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் (அக்சை சின்) ஆகியவற்றைச் சேர்த்துதான் கூறுகிறேன் என்று பொருள். இவ்விரு பகுதிகளும் ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள்தான் உள்ளன என்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT