இந்தியா

ஸ்ரீநகரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: அக்.12-இல் தொடங்குகிறது

DIN


ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; அத்துடன், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் (தொழிற்சாலைகள்) நவீன் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
ஸ்ரீநகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மூத்த மத்திய அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டை பிரபலப்படுத்துவதற்காக, ஆமதாபாத், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகிய மாநகரங்களிலும், துபை, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் உறுதியளித்துள்ளன. 
விவசாய தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை, சுற்றுலா, மருத்துவம், திரைப்படத் துறை, தகவல் தொழில்நுட்பம்,  கைவினை, உணவு பதப்படுத்துதல், மருந்து தயாரிப்பு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. 
அப்போது, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து தடையாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

SCROLL FOR NEXT