இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் சவாலாக விளங்குகிறது: குடியரசுத் தலைவர்

DIN

"நாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது; எனினும், அதை எதிர்கொள்ள மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், வார்தா பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் சனிக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நமது நாட்டின் சமூகப் பொருளாதாரப் பிரச்னைகள் அனைத்தும் சிக்கலானவை. அவை ஒன்றுடன் மற்றொன்று பிணைந்து காணப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். பல்வேறு நோய்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பரவக்கூடிய, பரவ இயலாத, புது விதமான நோய்கள் அதிக அளவில் மக்களைப் பாதித்து வருகின்றன.

நாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக உள்ளது. அதை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் "ஆயுஷ்மான் பாரத்' மிகவும் முக்கியமான திட்டமாகும். மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனமானது, கடந்த 50 ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் சிறந்த சேவையாற்றி வருகிறது.

மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பால் பலர் தங்களது உறவினர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் துன்பத்திலிருந்து விரைவில் மீண்டுவர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றன என்றார் ராம்நாத் கோவிந்த்.

முன்னதாக, சேவா கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகாத்மா காந்தி தங்கியிருந்த பாபு குடிலை குடியரசுத் தலைவர் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ""குடிலில் நான் நடந்தபோது, மகாத்மா காந்தியின் தியாகங்களும், போராட்டங்களுமே என் நினைவுக்கு வந்தன. இந்தக் குடிலானது மனிதநேயம், சத்தியம், அகிம்சை உள்ளிட்ட பலவற்றை அவருக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. மக்களுக்கான பல்வேறு சமூகப் பணிகளை இந்த ஆசிரமத்திலிருந்துதான் காந்தியடிகள் தொடங்கினார். அவர் எப்போதும் நமக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கிறார்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

உயா்கல்வி வழிகாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT