இந்தியா

மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வளர்ச்சி ஏற்பட்டதாகக் கூறுவது தவறு: அசோக் கெலாட்

DIN


நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான் நம் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டதாகக் கூறுவது தவறு என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த தினத்தை (ஆகஸ்ட் 20) முன்னிட்டு, தில்லியில் இரு நாள் புத்தாக்க இயக்க நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கின. இதில் பங்கேற்று அசோக் கெலாட் பேசியதாவது:
முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கு மத்தியில் அடுத்தடுத்து அமைந்த காங்கிரஸ் அரசுகள் பங்காற்றின. நமது ஜனநாயகத்தை நாங்கள் (காங்கிரஸ்) பத்திரமாக வைத்திருந்ததால்தான் அது இப்போது வலுவாக உள்ளது. அதனால்தான் நரேந்திர மோடி பிரதமராக வர முடிந்தது.
அதேவேளையில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டதாகக் கூறுவது தவறானது. வளர்ச்சி என்பது ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதில்லை. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோல் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை அவர் வலுப்படுத்தினார்.
கடந்த 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் தொலைபேசி மூலம் ஒருவரையொருவர் தொடர்பு  கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். அதேபோல் வெகு சிலரிடமே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தன. இந்த நிலை மாறி, தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டதற்கும், கணினி சகாப்தம் தொடங்கியதற்கும் ராஜீவ் காந்தியின் லட்சியத் திட்டங்களே காரணம்.
இன்று செல்லிடப்பேசி மூலமே ரயில், பேருந்து, விமானம் ஆகியவற்றுக்கான பயணச்சீட்டுகளை நாம் முன்பதிவு செய்கிறோம். உலகெங்கும் என்ன நடக்கிறது என்பதை நம்மால் இங்கிருந்தபடியே பார்க்க முடிவதோடு, யாரையும் குறுகிய நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை. லட்சியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த தலைவர்களான ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரிடம் இருந்து இளம் தலைமுறையினர் உத்வேகம் பெற வேண்டும்.
அகிம்சையை போதித்ததோடு, பிரிட்டீஷாரின் ஆட்சியில் இருந்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தி. ஆனால் , அகிம்சைத் தத்துவம் உருவான இந்த நாட்டில் தற்போது வன்முறைகள் நிகழ்வது துரதிருஷ்டவசமானது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானுக்குச் சென்று தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள். தேர்தல்களில் வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கம்தான் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜீவுக்கு ராகுல் புகழஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அவரது மகனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, சுட்டுரையில் வெளியிட்ட பதிவு மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அந்தப் பதிவில், ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் இந்த வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ராஜீவை கௌரவிக்கும் நோக்கில் இந்த வாரம் முழுவதும் அவரது சாதனைகளைக் குறிப்பிட உள்ளேன். இன்று ராஜீவ் கொண்டு வந்த தகவல்தொழில்நுட்பப் புரட்சியை நினைவுகூர்கிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சி குறித்து 55 நொடிகள் ஓடும் படக்காட்சியை அதனுடன் அவர் இணைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT