இந்தியா

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி பேச்சுவார்த்தை

DIN


மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸுக்கு வியாழக்கிழமை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். 
முன்னதாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தில்லியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார். 
அதில் முதல்கட்டமாக பிரான்ஸ் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ் லிட்ரியான் வரவேற்றார். 
பிரான்ஸ் வந்த பிறகு சுட்டுரையில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவும், பிரான்ஸும் மிக ஆழமான நட்புறவு கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக அவை இணைந்து பணியாற்றி வருகின்றன என்று கூறியுள்ளார். 
விமான நிலையத்திலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகையான ஷாடியு டி ஷான்டிலிக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். 
பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் பேச்சு நடத்தப்பட்டது. அத்துடன், இருநாடுகளிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பரஸ்பர நலன்கள் குறித்தும் பிரதமர் மோடி-அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அவர்கள் இருவர் இடையேயான பேச்சுவார்த்தையை அடுத்து, இந்தியா-பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. 
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி-அதிபர் மேக்ரான் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு அதிபர் மேக்ரான் கண்டனம் தெரிவித்தார். 
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவும், பிரான்ஸும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. 
பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் தங்களின் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும். 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது முதல் ரஃபேல் விமானத்தை அடுத்த மாதம் பெறும் என்றார்.
அடுத்த பயணம்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கிறார். அங்கு, அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயேத்துடன் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையடுத்து, பஹ்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை செல்கிறார். அந்நாட்டுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது, இது முதல் முறையாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT