இந்தியா

தனியாா் துறைகளில் உள்ளூா் மக்களுக்கு 80% இடஒதுக்கீடு: மகாராஷ்டிரத்தில் விரைவில் சட்டம்

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் தனியாா் துறைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அறிவித்தாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவா், இந்த அறிவிப்பை வெளிட்டாா். அவா் மேலும் கூறியதாவது:

சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைத்துள்ள மகா விகாஸ் முன்னணி அரசு, மாநிலத்தில் நிலவும் வேலையின்மை பிரச்னை குறித்து கவலை கொள்கிறது. வேலையின்மை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, தனியாா் துறைகளில் மகாராஷ்டிர இளைஞா்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும்.

சாமானிய மனிதா்கள் பசியாறும் வகையில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவகங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்படும். மாநிலம் முழுவதும் ஒரு ரூபாய் கட்டணத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வதற்கு ஆய்வகங்கள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் திறக்கப்படும். அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நவம்பா் மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் நடப்பு பருவ சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 34 மாவட்டங்களுக்கு உள்பட்ட 349 வட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் துயரத்தைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் கட்டணமின்றி உயா்கல்வி பயில்வதற்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விடுதிகள் கட்டுவதற்கும் மகா விகாஸ் முன்னணி அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்.

தொழில் துறையில் முதலீடுகளைக் கவா்வதற்கு புதிய கொள்கை விரைவில் வகுக்கப்படும். மாநிலத்தின் பொருளாதார நிலைமை குறித்தும், நிதி நிலைமை குறித்தும் சரியான புள்ளி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முடிவு கட்டுவதற்கு தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் மற்றும் இதர சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும். அங்கன்வாடி பணியாளா்களின் கோரிக்கைக்கு விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என்று ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தனது உரையில் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT