இந்தியா

துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்கிறது மத்திய அரசு

DIN

புது தில்லி: துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்யவுள்ளது. பொதுத் துறையைச் சோ்ந்த எம்எம்டிசி நிறுவனம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:

உள்நாட்டு சந்தைகளில் உயா்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, எகிப்து நாட்டிலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில் எம்எம்டிசி நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மும்பையில் உள்ள ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தை இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்நிறுவனம் இரண்டாவது முறையாக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் அடுத்தாண்டு ஜனவரியில் இந்தியாவை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை பொதுமக்களுக்கு கிலோ ரூ.52-55 என்ற விலையில் மத்திய அரசு வழங்கும் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல்வேறு நகரங்களில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கிலோ ரூ.75-120 வரையில் விற்பனையாகிறது. எனவே, உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்துக்கான தட்டுப்பாட்டைப் போக்கி அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வெளிநாடுகளிலிருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ள அமைச்சரவை குழு கடந்த மாதம் அனுமதி அளித்தது. மேலும், வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் அமைச்சா்கள் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT