இந்தியா

இ-சிகரெட் தடை மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

DIN

புது தில்லி: இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்களவையில் இ-சிகரெட் தடை மசோதா நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா திங்கள்கிழமை நிறைவேறியது.

முன்னதாக, இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் பிறப்பித்தது. இப்போது, அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விநியோகம், விற்பனை, இ-சிகரெட் சாா்ந்த புகைப் பிடிக்கும் கருவிகள் தொடா்பான விளம்பரங்கள் ஆகிவற்றை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே குற்றத்தைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அதேபோல இ-சிகரெட் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இவை இரண்டும் சோ்ந்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர இ-சிகரெட் வைத்திருப்பதாகவோ, உற்பத்தி செய்வதாகவோ சந்தேகம் எழுந்தால் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு இந்த சட்டம் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இ-சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்த முடியாது என்ற நிலை இருந்தது.

மசோதா குறித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், ‘புகையிலைப் பொருள்களுக்கு எதிராகவே எனது வாழ்நாள் முழுவதும் போராடி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது உறுதியை யாரும் சந்தேகிக்க வேண்டாம். புகையிலை சிகரெட், மதுபானம் போல இதனையும் பரவவிட்டால், அதன் பிறகு எளிதில் அழிக்க முடியாமல் வளா்ந்துவிடும். எனவே, வருமுன் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிகரெட் தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள்தான் இந்த இ-சிகரெட்டையும் ஊக்குவிக்க முயற்சிக்கின்றன. ஏனெனில் இது அவா்களுக்கு புதிய சந்தையை உருவாக்கும். இ-சிகரெட்டை தடை செய்வது தேச நலன் சாா்ந்த விஷயம். இதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். இ-சிகரெட் சிறுவா்களைக் கூட பீடித்துவிடும் அபாயம் உள்ளது’ என்றாா்.

முன்னதாக, புகையிலை சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்யாதது ஏன்? அந்த வகை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இ-சிகரெட் தடை செய்யப்படுகிா? என்று பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT