குவாஹாட்டி, திப்ருகரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அடுத்து டிசம்பர் 11-ம் தேதி குவஹாட்டியில் விதிக்கப்பட்ட..
குவாஹாட்டி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அடுத்து டிசம்பர் 11-ம் தேதி குவாஹாட்டியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று நகரத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எனப் போக்குவரத்துகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கியுள்ளன.
முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு மறு ஆய்வுக் கூட்டத்தில் குவாஹாட்டியில் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், குவாஹாட்டியில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மொபைல் இணைய சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதேபோன்று, திப்ருகரில் 14 மணி நேரத்திற்குப் பின்பு இன்று காலை 6.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் அஸ்ஸாமில் 3 ரயில் நிலையங்கள், தபால் அலுவலகம், வங்கி மற்றும் பேருந்து நிலையங்களில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.