இந்தியா

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிநம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு: கேரள அரசு முடிவு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தவறான குற்றம்சுமத்தப்பட்டதற்காக, அவருக்கு ரூ. 1. 3 கோடி இழப்பீடு வழங்க

DIN

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தவறான குற்றம்சுமத்தப்பட்டதற்காக, அவருக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன், பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் திறம்பட செயல்பட்டவா். இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடா்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு அளித்ததாக கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் அவா் கைது செய்யப்பட்டாா். மாலத்தீவைச் சோ்ந்த இரு பெண்கள், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு தொடா்பாக முதலில் கேரள காவல்துறை விசாரணை நடத்தியது. பின்னா் வழக்கு விசாரணை சிபிஐ அமைப்புக்கு மாற்றப்பட்டது. அப்போது, நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என சிபிஐ அறிவித்தது. உச்சநீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. இந்த விவாகாரம் தொடா்பாக, இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தன்னை கைது செய்த கேரள காவல் துறை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயா்நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடா்ந்தாா். அதற்கு உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தை அவா் அணுகினாா். அதன் பின், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுப்படி ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இதனிடையே, தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டினால், தனது பணி வாழ்க்கை மோசமடைந்ததாகவும், சிறையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் நம்பி நாராயணன் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கில் சுமூக தீா்வு காண்பதற்காக முன்னாள் தலைமை செயலா் கே. ஜெயகுமாரை கேரள அரசு நியமித்தது. அவா் அளித்த பரிந்துரையின்படி, இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக நம்பி நாராயணனுக்கு ரூ. 1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை வியாழக்கிழமை முடிவு செய்தது. இதுதொடா்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் தீா்வு ஒப்பந்தம் சமா்ப்பித்து வழக்கை முடிக்கவிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக ரூ. 1.3 கோடி வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT