இந்தியா

சிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்

DIN


சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லாவை பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு நியமித்துள்ளது. 

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் போக்கு கடந்த ஆண்டு உச்சகட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி ரத்து செய்த உச்சநீதிமன்றம், சிபிஐ இயக்குநர் பொறுப்பை மீண்டும் அலோக் குமார் வர்மாவிடம் வழங்கியது. அதேசமயம், அவர் அப்பதவியில் தொடர்வது குறித்து பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவின் கூட்டம் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 
அதில், அலோக் குமார் வர்மாவை தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக நியமனம் செய்ய மோடியும், ஏ.கே.சிக்ரியும் முடிவெடுத்தனர். இதையடுத்து, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மா விடுவிக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை  தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்ட அலோக் குமார் வர்மா, பணியிலிருந்து ராஜிநாமா செய்தார். 

இதைத் தொடர்ந்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக மீண்டும் நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் தலைமையிலான உயர்நிலை ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து, உயர்நிலைக் குழுவின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு சிபிஐ புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லாவை நியமித்துள்ளது. இவருடைய பதவிக்காலம் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற தேதியில் இருந்து 2 ஆண்டுகள் ஆகும். அதேசமயம், இடைக்கால இயக்குநராக செயல்பட்டு வந்த நாகேஸ்வர ராவ் அந்த  பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT