இந்தியா

புல்வாமா தாக்குதலின் மூலம் தெரிய வந்திருக்கும் மிக அதிர்ச்சிகரமான விஷயம் இதுவே

DIN


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 49 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஏராளமான ஊர் மக்களும், உயர் அதிகாரிகள் முதல்  அரசியல்வாதிகள் வரையிலும் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் கூறியிருக்கும் தகவல் மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அதாவது, காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தங்களது மத நம்பிக்கையின்படி, தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக மாற மாட்டார்கள். அவர்களது மத நம்பிக்கையும், வழிகாட்டுதல்களும் மாறுபட்டு இருக்கும். அந்த வகையில், இஸ்லாமிய மதத்தில் தற்கொலை செய்து கொள்வது என்பது பாவம். அதாவது ஹராம். எனவே, இஸ்லாமிய மதத்தினர் தற்கொலை செய்து கொள்வதையே பாவமாகக் கருதுவதால், தற்கொலைப் படைத் தாக்குதல்களில் ஈடுபட மாட்டார்கள்.

ஆனால், அதே இஸ்லாமிய மதத்தை அடிப்படையாக வைத்து பயங்கரவாத அமைப்புகளை நடத்துவோர், ஜிகாத்துக்காக தற்கொலை செய்வது ஹராம் ஆகாது என்று இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த கொள்கையை அடிப்படையாக வைத்தே சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயங்கரவாத இயக்கத்தில் இணையும் முஸ்லிம் இளைஞர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த தயார்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால், இதே கொள்கையை தற்போது காஷ்மீர் இளைஞர்களிடமும் கொண்டு வருகிறார்கள் என்பதை புல்வாமா தாக்குதல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம். இந்தக் கொள்கையைச் சொல்லி மூளைச்சலவை செய்து காஷ்மீர் இளைஞனை புல்வாமா தாக்குதலை நடத்தச் செய்திருக்கிறார்கள் என்றால் மற்ற பயங்கரவாதிகளையும் இதைச் சொல்லி தூண்டி விட வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர்.

இதற்கு முன்பும் 2000ஆவது ஆண்டில் 17 வயது இளைஞர் படாமிபாக் என்ற இடத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக வரலாறு சொல்கிறதே என்ற கேள்விக்கு, உண்மையில் அது தற்கொலைப் படைத் தாக்குதல் அல்ல. வெடிபொருள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்த இளைஞன், அங்கிருக்கும் பூங்காவில் வாகனத்தை நிறுத்திவிட்டு கிளம்பிவிட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் எதிர்பாராதவகையில், அந்த வாகனத்தை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய ஆரம்பித்ததும், பயத்தில் அவன் வெளியேற முயன்றான். இந்த சம்பவத்தை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த பயங்கரவாதி, உடனடியாக காரில் இருந்த வெடிபொருட்களை ரிமோட் உதவியோடு வெடிக்கச் செய்ததில் அந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.

கடந்த கால தாக்குதல்களை எடுத்துக் கொண்டால், பல மோசமான தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டிருக்கும், இந்த பயங்கரவாதிகளுக்கு காஷ்மீர் இளைஞர்கள் உதவி மட்டுமே செய்திருப்பார்கள்.

ஆனால், தற்போது இதுபோன்ற தாக்குதல்களை உள்ளூர் இளைஞர்களையே வைத்துச் செய்யும் அளவுக்கு ஜெய்ஷ் அமைப்பு உருமாறியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் முயற்சியால் காஷ்மீர் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தங்களது சொந்த மண்ணிலேயே நேரடியாக தாக்குதல்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனவே, புல்வாமா தாக்குதலின் மூலம், பயங்கரவாத அமைப்பு மிக மோசமான ரூபத்தில் உருமாறியிருப்பதை உணர முடிகிறது என்கிறார் ஓய்வு பெற்ற டிஜிபி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT