இந்தியா

காஷ்மீரில் ஜெஇஎம் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை: ராணுவ மேஜர் உள்பட மேலும் 6 பேர் பலி

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படைப் பிரிவு வீரர்களை குறிவைத்து அண்மையில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜெஇஎம்) பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்பட மேலும் 6 பேரும் பலியாகினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். சிஆர்பிஎஃப் படை  வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்கச் செய்தார். இதில் 40 சிஆர்பிஎஃப் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெஇஎம் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், புல்வாமா மாவட்டம்,  பிங்க்லான் பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பி சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இந்த சண்டை சுமார் 16 மணி நேரம் நீடித்தது.
இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்களும், போலீஸார் ஒருவரும் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.
இவர்களைத் தவிர்த்து, ராணுவ பிரிகேடியர் ஜெனரல், லெப்டினென்ட் கர்னல், ஜம்மு காவல்துறையை சேர்ந்த டிஐஜி உள்பட 9  பேர் காயமடைந்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கு மூளை யாகச் செயல்பட்டவர்: சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் இருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர், பாகிஸ்தானியர். அவரது பெயர் கம்ரான் ஆகும். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தளபதியாக செயல்பட்டு வந்துள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படையினர் மீது 14ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இவர் மூளையாகச்  செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.
2ஆவது பயங்கரவாதியின் பெயர், ஹிலால் அகமது ஆகும். புல்வாமாவை சேர்ந்தவர். மூன்றாவது பயங்கரவாதியின் அடையாளம் தெரியவில்லை. அதுகுறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீர மரணமடைந்த ராணுவ மேஜரின் பெயர் வி.எஸ். தோண்டியால். அவர் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனைச் சேர்ந்தவர். எஞ்சிய 3 ராணுவ வீரர்களும், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
சண்டையில் வீரமரணமடைந்த 4 ராணுவ வீரர்களின் சடலங்களுக்கும், 15ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் 15-ஆவது படைப்பிரிவு கமாண்டரான லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எல். தில்லோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ராணுவத்தினர் 4 பேரின் சடலங்களும், இறுதி சடங்கு மேற்கொள்வதற்காக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT