இந்தியா

நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

DIN


சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
சிபிஐ அமைப்புக்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்பட்டுவிட்டதால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா (58) கடந்த 2-ஆம் தேதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே மோதல்போக்கு கடந்த ஆண்டு உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து, இருவரையும் பொறுப்பிலிருந்து விடுவித்த மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் வர்மாவுக்கு மீண்டும் பொறுப்பை வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும், அவர் அந்த பதவியில் தொடர்வது குறித்து பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழு முடிவெடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஆலோசனை நடத்திய உயர்நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை தீயணைப்புத் துறை தலைமை இயக்குநராக பணி மாற்றம் செய்தது. அப்பொறுப்பை ஏற்காத அவர், பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக மீண்டும் நாகேஸ்வர ராவ் கடந்த மாதம் 10-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தேர்வுக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், நாகேஸ்வர ராவின் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை. சிபிஐ அமைப்புக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். சிபிஐ இயக்குநர் நியமன நடைமுறையில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரிக்கும் அமர்விலிருந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடுத்தடுத்து விலகிய நிலையில், நீதிபதி என்.வி.ரமணாவும் விலகினார். இந்த மனு மீது கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ இயக்குநர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. சிபிஐ அமைப்புக்கு நிரந்தர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. 
அப்போது, சிபிஐ அமைப்புக்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்பட்டுவிட்டதால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT