இந்தியா

சந்தா கோச்சார் வெளிநாடு செல்வதை தடுக்க சிபிஐ நோட்டீஸ்

DIN


விடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் உள்ளிட்டோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக குடியேற்றத் துறைக்கு சிபிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இவர்கள் வெளிநாடு செல்ல முயன்றால் தடுத்து நிறுத்தப்பட்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
விடியோகான் குழுமத்தின் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத்தின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இவர்கள் மூவரும் சிபிஐ அனுமதியின்றி வெளிநாடு செல்ல முடியாது. அவ்வாறு அவர்கள் செல்ல முயற்சித்தால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த வழக்கில், சந்தா கோச்சாரின் வாக்குமூலத்தை பெறுவதற்காக இதுவரை அழைப்பாணைகள் எதுவும் அனுப்பப்படவில்லை தெரிவித்தனர்.
விடியோகான் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.1,875 கோடி கடன் அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஐசிஐசிஐ வங்கியை ஏமாற்றி கடன் வாங்கி நிதி மோசடி செய்தது தொடர்பாக வேணுகோபால் தூத், சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. அதில் ஐசிஐசிஐ வங்கியை மோசடி செய்யும் வகையில், பிறருடன் சேர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு சந்தா கோச்சார் கடன் அளித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
சந்தா கோச்சார் தவிர்த்து, அவரது கணவர் தீபக் கோச்சார், தீபக்கின் நுபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனம், சுப்ரீம் எனர்ஜி, விடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், விடியோகான் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில்,  கணவர் தீபக் கோச்சார் தொடங்கிய நூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில், வேணுகோபால் தூத் 64 கோடி ரூபாயை முதலீடு செய்தார். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே தூத், ஐசிஐசிஐ வங்கியிடம் கடன் கேட்டு அணுகினார். அவருக்கு மிகப்பெரிய தொகையை கடனாக ஐசிஐசிஐ வங்கி அளித்தது.  கோச்சாரின் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு பிரதிபலனாகவே விடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ வங்கி கடன் அளித்தது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT