இந்தியா

ரூ.75,000 கோடியில் விவசாயிகள் உதவித்தொகை திட்டம்

DIN

விவசாயிகளுக்கு ரூ.75,000 கோடியில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படவுள்ளது. முதல் தவணைத் தொகையாக ரூ.2,000, ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பரிமாற்ற முறையில் நேரடியாகச் செலுத்தப்பட்டது.
2 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவித்தொகையாக, ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோரக்பூரில் உள்ள மைதானம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்தபடி காணொலி முறையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1.01 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முதல் தவணைத்தொகை ரூ.2,000, நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு இத்தொகை விரைவில் வழங்கப்பட்டு விடும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.75,000 கோடி செலவாகும்.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களுக்கு (காங்கிரஸ் கூட்டணி), 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான், குறிப்பாக, தேர்தல் நேரத்தில்தான் விவசாயிகளைப் பற்றிய கவலை வரும். தேர்தலில் வாக்குகளைக் கவர்வதற்காக, அவர்கள் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிப்பார்கள். அந்தத் திட்டங்களை, நான் அம்பலப்படுத்துவேன் என்று அவர்களுக்குத் தெரியாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலை அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சில மாநில அரசுகள் (காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்), அந்தப் பட்டியலை அனுப்பவில்லை. அந்த மாநில அரசுகள், விவசாயிகளின் சாபத்தைப் பெறும். அது, அவர்களின் அரசியல் வாழ்வை அஸ்தமனமாக்கும்.
விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது மிகவும் சுலபம். அது, எங்களுக்கு மிகவும் எளிமையான வழியும் கூட. தேர்தல் ஆதாயம் கருதி, விவசாயிகள் கடனை நாங்கள் ரத்து செய்துவிட முடியும். ஆனால், அந்தப் பாவத்தைச் செய்யவில்லை. ஏனெனில், விவசாயக் கடனை ரத்து செய்வதால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே பலனடைவார்கள்.
இத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவதால், விவசாயிகள் எங்களை ஆதரிப்பார்கள். இதையறிந்து, எதிரிகள் கலக்கமடைந்து காணப்படுகிறார்கள். 
முந்தைய காங்கிரஸ் அரசு, 10 ஆண்டுகளில் ரூ.52,000 கோடி விவசாயக் கடனை ரத்து செய்தது. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் ஆண்டுக்கு ரூ.75,000 கோடி வழங்குகிறோம்.
இந்தப் பணம், விவசாயிகளுக்கானது. அதை வசூலிக்க மாட்டோம். இது தொடர்பாக, யாராவது வதந்தி பரப்பினால், விவசாயிகள் அதை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் முந்தைய அரசுகளிடம் இல்லை. அதனால், அவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. அந்த நிலையை மாற்றுவதற்கான வாய்ப்பை கடந்த 2014-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு அளித்தீர்கள்.
அதன்படி, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, அவர்களுக்கு  கெளரவமான முறையில் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு பாஜக தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது.
அரசு, மக்களுக்கு 100 ரூபாய் கொடுத்தால் அதில் 85 ரூபாய் இடைத்தரகர்களின் கைகளுக்குச் சென்று விடும் காலம் போய் விட்டது. விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்களுக்கு வேலையில்லை.
இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு தகுதியான விவசாயிகளின் பட்டியலை அனைத்து மாநில அரசுகளும் அளிக்க வேண்டும். முற்றிலும் வெளிப்படையான முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT