முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசம், உத்தரகண்டிலும் பகுஜன் சமாஜ் - சமாஜவாதி கூட்டணி

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டிலும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக பகுஜன் சமாஜ் - சமாஜவாதி கட்சிகள் அறிவித்துள்ளன.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:39 am IST
பகிர்:


உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டிலும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக பகுஜன் சமாஜ் - சமாஜவாதி கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2019 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், உத்தரகண்டில் பகுஜன் சமாஜ் - சமாஜவாதி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதில் மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும் சமாஜவாதி போட்டியிடும். மற்ற தொகுதிகளில் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதேபோல 5 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரகண்டில் 1 தொகுதியில் சமாஜவாதி கட்சியும், 4 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 37 தொகுதிகளிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துப் போட்டிடுவது என இருகட்சிகளும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தன. 
அப்போது, இரு கட்சிகளும் சமஅளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்றும் முடிவெடுத்திருந்தன. இப்போது, இக்கூட்டணி மத்தியப் பிரதேசம், உத்தரகண்டிலும் களமிறங்கியுள்ளது.
தந்தையின் எதிர்ப்பை மீறி...: முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தனது மகன் அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்துள்ளது குறித்து தான் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.