மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை: கர்நாடக முதல்வர் குமாரசாமி
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு விமானத் தொழில் கண்காட்சியில் வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் பல வாகனங்கள் சேதமடைந்தன. இதனை அரசியல் ஆக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
இயற்கை பேரிடர், தீ விபத்துகள் எதிர்பாராமல் ஏற்படுவது. இதனை அரசியல் ஆக்கக் கூடாது. இதுகுறித்து பாஜகவினர் கூட்டணி அரசை விமர்சனம் செய்கின்றனர். மக்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் நான், மாநில பாஜகவுடன் மட்டுமல்லாது, மத்திய அரசுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் தனி மனித விமர்சனமும், தாக்குதல்களையும் நடத்துவதைத் தவிர்க்கும் வகையில், அவற்றை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பான முறையில் சட்டம்-ஒழுங்கு: கர்நாடகத்தில் போலீஸார் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த காலங்களில் கடலோரப் பகுதிகளில் மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இவை மஜத- கூட்டணி ஆட்சியில் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. சட்டம்- ஒழுங்கும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை சிறப்பாக நடத்திட காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
காட்டுத் தீயை அணைக்க நடவடிக்கை: பண்டிப்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்க கர்நாடக அரசு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க மத்திய அரசிடம் 4 ஹெலிகாப்டர்கள் கேட்டுள்ளோம். இதை வழங்குவதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. இதனால், காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் ரஜனீஷ் கோயல், டிஜிபி நீலமணி ராஜு, மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.