இந்தியா

சபரிமலை விவகாரம்: கேரளத்தில் 2-ஆவது நாளாக வன்முறை

DIN


சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட வன்முறை, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. 
இதுகுறித்து கேரள போலீஸார் மேலும் கூறியதாவது:
கேரளத்தில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 1,369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 801 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 717 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கோழிக்கோடு மாவட்டத்தின் பெரம்பரா பகுதியில் மலபார் தேவஸ்வம் வாரிய உறுப்பினர் கே.சசிகுமாரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. பத்தனம்திட்டா மாவட்டம் அடூரில் செல்லிடப்பேசி கடை ஒன்றிலும் நாட்டுவெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
கண்ணூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த குண்டுவீச்சு சம்பவங்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறையில் ஈடுபட்டதாக 200 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணூரில் பாஜக அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர்.
பத்தனம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிலரின் வீடுகளில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர்.
பாலக்காட்டில் தடையுத்தரவு: இதனிடையே, வன்முறை பரவியதை அடுத்து பாலக்காடு நகரத்திலும், காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரம் தாலுகாவிலும் வியாழக்கிழமை இரவு முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாலக்காடு நகரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை மாவட்ட ஆட்சியர் டி. பாலமுரளி தடையுத்தரவு பிறப்பித்தார். அதேபோல், வெள்ளிக்கிழமை மாலை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். 
மஞ்சேஸ்வரம் தாலுகாவில் வியாழக்கிழமை இரவு 11 முதல் 24 மணி நேரத்துக்கு தடையுத்தரவு பிறப்பித்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் டி. சஜித் பாபு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
தந்திரியிடம் விளக்கம் கோரும் டிடிபி: சபரிமலையில் வியாழக்கிழமை இரு பெண்கள் தரிசம் செய்ததை அடுத்து, சந்நிதானத்தை புனிதப்படுத்தும் நடைமுறைகளே மேற்கொண்டது தொடர்பாக கோயில் தலைமை தந்திரியிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு பெண் வழிபாடு: இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சசிகலா (47) என்ற பெண் சபரிமலையில் வியாழக்கிழமை இரவு தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
முதல்வர் அலுவலகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதைய உறுதி செய்துள்ள நிலையில், ஐயப்பனை தரிசிக்க விடாமல் காவல்துறையினர் தன்னை திருப்பி அனுப்பிவிட்டதாக வெள்ளிக்கிழமை காலை சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும், அவர் தரிசனம் செய்துவிட்டதாகக் கூறும் காவல்துறையினர், பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலா அவ்வாறு கூறலாம் என்று தெரிவித்தனர். மேலும், அவர் தரிசனம் செய்ததாக சில கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அவர்கள் வெளியிட்டனர். 
இதனிடையே, சபரிமலை செல்ல முயன்ற கயல் என்ற திருநங்கையை காவல்துறையினர் பம்பையிலேயே வெள்ளிக்கிழமை தடுத்து திருப்பி அனுப்பினர்.
தீவிரப்படுத்த திட்டம்: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்தப்போவதாக சபரிமலை கர்மா சமிதி அமைப்பும், பாஜகவும் தெரிவித்தன. 
சபரிமலை கர்மா சமிதி தலைவர் எஸ்.ஜி.ஆர். குமார் கூறுகையில், மாவோயிஸ்டுகள் ஆதரவுடன் இரு பெண்களை சபரிமலை சந்நிதானத்துக்குள் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். மாவோயிஸ்டுகளுடன் கேரள அரசுக்கு இருக்கும் தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றார்.
ஆர்எஸ்ஸ் தலைவர் ஜே. நந்தகுமார், பாஜகவில் சமீபத்தில் இணைந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஆகியோரும், சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT