இந்தியா

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா அதிரடி மாற்றம்: மத்திய அரசு நடவடிக்கை

DIN


சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவியிலிருந்து ராகேஷ் அஸ்தானா வியாழக்கிழமை அதிரடியாக மாற்றப்பட்டார். அவருடன், சிபிஐ இணை இயக்குநர் அருண் குமார் சர்மா, சிபிஐ டிஐஜி மணீஷ் குமார் சின்ஹா, சிபிஐ கண்காணிப்பாளர் ஜெயந்த் ஜே.நாயக்நவாரே ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மாவை, அப்பதவியிலிருந்து மாற்றி, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை குழு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்தச் சூழலில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட 4 உயரதிகாரிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, மத்திய பணியாளர், பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், சிபிஐ அமைப்பில் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 உயரதிகாரிகளின் பணிக் காலம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ராகேஷ் அஸ்தானா, விமான போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு பிரிவுக்கும், அருண் குமார் சர்மா மத்திய ரிசர்வ் படைக்கும், மணீஷ் குமார் சின்ஹா காவல்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அலோக் குமார் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையிலான மோதல் போக்கு கடந்த ஆண்டு உச்சகட்டத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில், சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கிலிருந்து, ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இரு உயரதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அலோக் குமாருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கியது. மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, சிவிசி அறிக்கையில் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து கூடிய உயர்நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றியது. தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும், அப்பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
அவரை பதவியிலிருந்து நீக்க மத்திய அரசு அவசரம் காட்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், ராகேஷ் அஸ்தானா, அருண் குமார் சர்மா, மணீஷ் குமார் சின்ஹா, ஜெயந்த் ஜே.நாயக்நவாரே உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை முதலில் விசாரித்து வந்தவர் சின்ஹா. ஆனால், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்ற பின், அவரை நாகபுரி அலுவலகத்துக்கு பணியிடமாற்றம் செய்தார். பின்னர், அலோக் குமார் மீண்டும் பொறுப்பேற்றபோது, சின்ஹாவின் பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்தார். இதேபோல், தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள அருண் குமார் சர்மா, வர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்தவர்.
அஸ்தானாவும், சர்மாவும் குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள்; சின்ஹா ஆந்திர பிரிவையும், நாயக்நவாரே மகாராஷ்டிர பிரிவையும் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளாவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT