இந்தியா

ஊழல், பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

DIN

ஊழல், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்ற வைப்ரன்ட் குஜராத் மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஒட்டுமொத்த உலகத்திலும் அமைதி நிலவுவது அவசியமாகும்.  வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படையே ஆகும். ஆதலால் வைப்ரன்ட் குஜராத் மாநாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.
நமது முன்பு 3 சவால்கள் இருக்கின்றன. அந்த 3 சவால்களையும் உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வருகின்றன. அதில் ஒரு சவால், பயங்கரவாதம் ஆகும். பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. அது மனிதநேயத்துக்கு மிகப்பெரிய எதிரி.
அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுத்தால், பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்து விடலாம். அதேபோல், பருவநிலை மாற்றம் தொடர்பான சவாலுக்கு தீர்வு காணவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல், உலகம் முழுவதும் பெரும் சவாலாக உள்ளது. அது நம்மையே அழித்து விடும். ஆதலால் ஊழலுக்கு முடிவு கட்ட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு நாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ள சட்டவிரோத பணம் குறித்த தகவல்களை அனைத்து நாடுகளும் தங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். சொந்த நாட்டில் நிதியை மோசடி செய்துவிட்டு, பிற நாடுகளில் தலைமறைவாகி விடும் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த 3 பிரச்னைகளிலும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான், வளர்ச்சியின் பயனை அனைவரும் அடைய முடியும். இதை உலக நாடுகள் தங்களது மனதில் கொண்டு,  இந்த 3 பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி என்பது தொழில்துறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
 விவசாயம், உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப சேவைத் துறை ஆகியவையும் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த மையமாக நாட்டை மாற்றியுள்ளது. ஆதலால், இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதல் சுகாதார துறை வரை இருக்கும் வாய்ப்புகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்வதற்கு இதுவே சரியான தருணம் ஆகும். 
உலகப் பொருளாதாரத்தில் ஜொலிக்கும் சுடராக இந்தியா தற்போது திகழ்கிறது என்றார் அவர்.
முன்னதாக, நர்மதா மாவட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மறைந்த மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் உருவச் சிலையை வெங்கய்ய நாயுடு சுற்றி பார்வையிட்டார். 
பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள படேல் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT