சொத்துக் குவிப்பு வழக்கு: தில்லி உயர்நீதிமன்றத்தில் வீரபத்ர சிங் மேல்முறையீடு
சொத்துக் குவிப்பு வழக்கில் தங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் தங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் ஆகியோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்தனர். அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.10 கோடி சொத்து சேர்த்ததாக அவர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவை முறையாக இறுதி செய்ய வேண்டியுள்ள நிலையில், அதன் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கணக்கில் வராத பணத்தை, ஆப்பிள் விற்றதன் பேரில் கிடைத்ததாகக் கணக்கு சமர்ப்பித்து வருமான வரித்துறை அதிகாரிகளை ஏமாற்ற வீரபத்ர சிங் முயன்றதாகவும், அதற்கு அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்ட 7 பேர் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணை நீதிமன்றம் தனது டிசம்பர் மாத உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கில், வீரபத்ர சிங், பிரதீபா சிங் தவிர்த்து, எல்ஐசி முகவர் ஆனந்த் செளஹான், லால் செளஹான், ஜோகிந்தர் சிங் கால்தா, பிரேம் ராஜ், வகாமுல்லா சந்திரசேகர், லாவன் குமார் ரோச், ராம் பிரகாஷ் பாட்டியா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத்திலிருந்து, தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2016 ஏப்ரல் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது, இந்த வழக்கில் வீரபத்ர சிங்கை கைது செய்யக்கூடாது என சிபிஐக்கு அறிவுறுத்தியிருந்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வீரபத்ர சிங்கிடம் கூறியிருந்தது.