இந்தியா

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்: அறிக்கையால் மோடி அரசுக்கு சிக்கல் 

DIN

புது தில்லி: கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக, 'தேசிய சாம்பிள் சர்வே' அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் சார்பாக பல்வேறு காரணிகள் குறித்த தகவல்களை திரட்டும் பொருட்டு 'தேசிய சாம்பிள் சர்வே'  என்னும் தகவல் சேகரிப்பு அறிக்கை உருவாக்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு 2017-18-ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட அறிக்கையை 'பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு' என்னும் பொருளாதார நாளேடு  ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்களாக செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதாவது:

நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்து விட்டது. இந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நாட்டில் நிலவியதற்கு ஒப்பாகும்.

இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவீதம் உயர்ந்து தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம் நகர்ப்புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாகவும் இருந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்த  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முதல் முழுமையான ஆய்வு அறிக்கை என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசு கூறி வந்தாலும், போதுமான அளவு இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது.

இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல்தலைவராக இருந்த பி.சி. மோகனன் , உறுப்பினர் ஜே.மீனாட்சி ஆகியோர் கடந்த திங்கள்கிழமை தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.

வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த தங்களின் 'மாதிரி புள்ளிவிவர அறிக்கையை' வெளியிட மத்திய  அரசு முறையான அனுமதி வழங்காத காரணத்தால் வேதனை அடைந்துள்ளதாகவும்,  உண்மையில் இதை வெளியிட்ட அரசு தரப்பில் போதுமான ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அறிக்கை தயாரிப்பின் போது மற்ற அரசு நிறுவனங்களின் தலையீடும் இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்த தொடர் துவங்கியுள்ள நிலையில் மத்திய அரசுக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT