இந்தியா

தாவூதின் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

DIN


மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சட்ட விரோதச் செயல்களைத் தடுப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜெய்ஷ்ஏமுகமது, லஷ்கர்ஏதொய்பா, தாவூத் இப்ராஹிமின் டிகம்பெனி ஆகிய அமைப்புகள் மூலமாக வரும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் சர்வதேச பயங்கரவாதத்துக்கும், திட்டமிட்ட குற்றங்களுக்கும் இடையேயான தொடர்பு' என்ற பெயரில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதின், தாவூத் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
பயங்கரவாத அமைப்புகள் தங்களது நிதியைப் பெருக்குவதற்காக, இயற்கை வளங்களைச் சுரண்டி விற்பனை செய்வது, ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல், சமூக விரோத கும்பல்கள், பயங்கரவாதிகளுடன் இணைந்து, அவர்களுக்கு சட்ட விரோதமாக நிதியுதவி அளிப்பது, கள்ளநோட்டுகளை அளிப்பது, ஆயுதங்களை விற்பனை செய்வது, போதை மருந்துகளைக் கடத்துவது, எல்லைப் பகுதிகளுக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகளை அனுப்பி வைப்பது போன்ற வழிகளில் உதவி செய்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக, தாவூத் இப்ராஹிமின் அமைப்பு, மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளது. அவர், பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அரசு கூறிவிட்டது. இருப்பினும், பாதுகாப்பான இடத்தில் இருந்து, அவரும், அவரது அமைப்பும் செய்யும் சட்டவிரோதச் செயல்கள், இந்தியாவுக்கு உண்மையான அச்சுறுத்தல்களாக உள்ளன.
ஜெய்ஷ்ஏமுகமது, லஷ்கர்ஏதொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை எடுத்ததுபோல், தாவூத் இப்ராஹிமின் டிகம்பெனிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து, அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்.
பயங்கரவாதமும், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 
பயங்கரவாதிகளும், சமூகவிரோத கும்பல்களும் அரசு நிர்வாகத்தை முடக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இவற்றைத் தடுப்பதற்கு இரு நாட்டு அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
எனவே, தாவூத் இப்ராஹிமின் அமைப்பின் செயல்பாடுகளுக்கு முடிவு கட்டுவதற்கு பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்புடன் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சையது அக்பருதீன்.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு தாவூத் இப்ராஹிமும், அவரது கூட்டாளிகளும்தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும் இந்தியா தெரிவித்து வருகிறது. இதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT