இந்தியா

ஹிமாசல் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

DIN


ஹிமாசலப் பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தில் கனமழையால் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13 பேர் ராணுவத்தினர் ஆவர்.
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சோலன் மாவட்டத்தில் கனமழை காரணமாக, நஹான்-குமார்ஹாட்டி சாலையில் இருந்த 4 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. அந்த கட்டடத்தில் உணவகமும் செயல்பட்டு வந்தது. அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அஸ்ஸாம் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். கட்டட விபத்தைத் தொடர்ந்து, ராணுவத்தினர், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கட்டட இடிபாடுகளில் இருந்து, 8 பேரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 6 சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 பேர் ராணுவத்தினர் ஆவர்.
இதேபோல், ராணுவத்தைச் சேர்ந்த 17 பேர் உள்பட 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஹிமாசலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்குர், சம்பவ இடத்தை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். அவர் கூறுகையில், இடிந்து விழுந்த கட்டடம், உரிய விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுபோன்ற விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT