இந்தியா

புதுவை அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை

DIN

வரும் 7-ஆம்  தேதி நடைபெறவுள்ள புதுவை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், அரசின் அன்றாட அலுவல்களில் ஈடுபடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி மறுத்துவிட்டது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க எதிர்மனுதாரரான கே. லட்சுமிநாராயணனுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதிதாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி  திங்கள்கிழமை முறையிட்டார். 
அதன்படி, இந்த  வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் ஏ.எஸ். நத்கர்னி,  அமன் லேகி ஆகியோர் ஆஜராகி, தற்போதைய வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலை தொடர உத்தரவிட வேண்டும். மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நீதிமன்றம் பரிசீலிக்காவிட்டால், புதுச்சேரியில் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அல்லது பாதிக்கப்படும். ஜூன் 3-ஆம் தேதி நடைபெற இருந்த புதுவை அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளவை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டால், பிரதான வழக்கும், தற்போதைய வழக்கும் வீணாகிவிடும் என்று வாதிட்டனர். இதற்கு எதிர்மனுதாரர் கே. லட்சுமிநாராயணன் மற்றும் புதுச்சேரி அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் ப. சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதையடுத்து  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் ஜூன் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. தற்போதைய வழக்கில் புதுவை முதல்வர் எதிர்மனுதாரராக சேர்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.  அடுத்த விசாரணை நடைபெறும் வரையில், ஜூன் 7-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் நிதிச் செலவினங்கள், நிலப்  பரிமாற்றங்கள் ஆகியவை  தொடர்பான முடிவுகளை அமல்படுத்தக் கூடாது. ஜூன் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பொருள் நிரல் உள்ளிட்ட ஆவணங்களை  பிரமாணப் பத்திரமாக  மத்திய அரசின் வழக்குரைஞம், புதுச்சேரி அரசின் வழக்குரைஞரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து (ஜூன் 4) மூன்று நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT