பாட்னா விமான நிலையத்தை தகர்ப்பேன்: மிரட்டல் விடுத்த 2ம் வகுப்பு மாணவன்
போஜ்புரி ஹிந்தி படத்தைப் பார்த்து அதன் தாக்கத்தால், பாட்னாவில் உள்ள ஜெய் பிரஜாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாட்னா: போஜ்புரி ஹிந்தி படத்தைப் பார்த்து அதன் தாக்கத்தால், பாட்னாவில் உள்ள ஜெய் பிரஜாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பை செய்தது வெறும் 8 வயது சிறுவன் என்பதை அறிந்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
தொலைபேசி அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தியதில், பிர்லா காலனியைச் சேர்ந்த சித்தாந்த் ஷர்மா என்பவரது பெயரில் அது பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த முகவரிக்குச் சென்ற காவல்துறையினர், ஷர்மாவிடம் விசாரணை நடத்திய போது, அவரது 8 வயது பேரன், தானே இந்த மிரட்டலை விடுத்ததாக ஒப்புக் கொண்டார்.
தனது தாத்தா உறங்கும் போது அவரது செல்போனை தான் பயன்படுத்துவது வழக்கம் என்றும், கூகுளில் பாட்னா விமான நிலையத்தின் போன் நம்பரை தேடி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தான்.
மேலும் அவன் கூறுகையில், போஜ்புரி படத்தில் வரும் ஒரு காட்சியில் விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறும் வசனம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும், அதற்காகவே தானும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளான்.
காவல்துறையினர் சிறுவனை விசாரித்து, மீண்டும் இதுபோன்ற தவறை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.