இந்தியா

மம்தாவுடன் பேச்சு நடத்த தயார்: இளநிலை மருத்துவர்கள்

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 6 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தை மூடப்பட்ட அறைக்குள் இல்லாமல், திறந்த வெளியில், ஊடகத்தினரின் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். 
பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தை முதல்வரே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார். 
மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். அன்றிரவு, அந்த மருத்துவமனைக்குள் நுழைந்த ஒரு கும்பல், இளநிலை மருத்துவர்கள் இருவரை கடுமையாகத் தாக்கியது.  இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். 
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது.
இதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
முன்னதாக, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தலைமைச் செயலகத்துக்கு சனிக்கிழமை மாலை வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை மருத்துவர்கள் நிராகரித்து விட்டனர். 
முதல்வர் அழைக்கும் இடத்துக்கு தங்களால் செல்ல முடியாது என்றும், தாங்கள் அழைக்கும் இடத்துக்கு வந்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், தங்களது போராட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக, முதல்வர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; அதன்பிறகே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 
இதையடுத்து, மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது அழைப்பை மருத்துவர்கள் நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பிடிவாதத்தை தளர்த்தி, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டனர். 
இதுகுறித்து இளநிலை மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
எங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே விரும்புகிறோம். இதற்காக, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தை அவரே தேர்வு செய்துகொள்ளலாம். 
ஆனால், அந்த இடம் மூடப்பட்ட அறையாக இல்லாமல், திறந்த வெளியாக இருக்க வேண்டும். ஊடகத்தினரும், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் அளவுக்கு விசாலமானதாக இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதும், மக்களின் நலன் கருதி விரைவில் பணிக்குத் திரும்புவோம். எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர்.

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்

மருத்துவர்களையும், மருத்துவச் சேவையில் ஈடுபடுவோரையும் பாதுகாப்பதற்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களது நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை, 24 மணி நேரத்துக்கு அனைத்து சேவைகளையும் நிறுத்திக்கொள்வதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எனினும், அவசர சிகிச்சை மற்றும் விபத்துக்கான மருத்துவ சேவை தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில்...: மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 17)  ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அதேவேளையில், வேலைநிறுத்தத்தால்  அவசர சிகிச்சைகள் பாதிக்காது என்றும் மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் எவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT