இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக் கொலை; ராணுவ அதிகாரி வீரமரணம்

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் திங்கள்கிழமை ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும், இரு வீரர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவத்தினர் திங்கள்கிழமை காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, ராணுவத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேசமயம், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர். 
அவர்கள், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் அத்துமீறல்: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். மேலும், சிறுமி உள்பட கிராமவாசிகள் 3 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினர். 
சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் வெடிகுண்டுகளை பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டது. 
இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். மேலும், கனோட் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மரியம் பீ (11) காயமடைந்தார். இதேபோல், ஷாபூர் கிராமத்திலும் இருவர் காயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய தரப்பிலிருந்து தக்க பதிலடி தரப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் சலோத்ரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT