இந்தியா

சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க சட்டம்: மத்திய அரசுக்கு கேரளம் கோரிக்கை

DIN


சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று கேரள அரசு புதன்கிழமை கோரியது. 
சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக தனிநபர் மசோதா ஒன்றை கொல்லம் எம்.பி.யான என்.கே. பிரேமச்சந்திரன் மக்களவையில் கொண்டுவரவுள்ள நிலையில், கேரள அரசு இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. 
அந்தத் தனிநபர் மசோதா இந்த வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. 
இந்நிலையில், கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
சபரிமலை விவகாரமானது, தனிநபர் மசோதா வடிவில் மத்திய அரசு முன்பாக வருகிறது. எனினும், அந்த மசோதாவின் நிலை என்னவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், கேரள பாஜக தலைமை மத்திய அரசிடம் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். 
அதற்குத் தேவையான பெரும்பான்மையும் மக்களவையில் பாஜகவுக்கு இருக்கிறது என்று கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். 
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியது. 
இதற்கு வலதுசாரி அமைப்புகளும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது. 
கோயில் பாரம்பரியத்தின்படி, மாதவிடாய் சுழற்சி ஏற்படும் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT