இந்தியா

நெருக்கடி நிலை காலத்தில் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு ஓய்வூதியம்: தேவேந்திர ஃபட்னவீஸ்

DIN


நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதியளித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது, நெருக்கடி நிலை காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் பவார் கேள்வி எழுப்பினார். 
இதற்குப் பதிலளித்த மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை இணையமைச்சர் மதன் எராவார், ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்திருந்த 3,267 பேரின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. அதில், 1,179 பேர் நெருக்கடி நிலை காலத்தில் தாங்கள் சிறையில் இருந்ததாக ரூ.100 மதிப்பிலான முத்திரைத் தாளைச் சமர்ப்பித்துள்ளனர். அதனடிப்படையில் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து, முத்திரைத்தாளை அடிப்படையாகக் கொண்டு, அவர் சிறையில்தான் இருந்தார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்று அஜீத் பவார் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த எராவார், அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதற்குப் பிறகே விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஓய்வூதியத் திட்டத்துக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.29 கோடி ஏற்கெனவே பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ பராக் அலவானி கூறுகையில், சிறையில் இருந்தவர்களுக்கு பணத்தை விட மரியாதை அதிகம் அளிக்க வேண்டும். இந்த ஓய்வூதியத் தொகையை ரூ.25,000 ஆக உயர்த்தினால் சிறப்பாக இருக்கும். மேலும், அவர்களைக் கெளரவித்து பதக்கமும் வழங்கலாம் என்றார்.
அப்போது பேசிய ஃபட்னவீஸ், பெரும்பாலான மக்கள் ஓய்வூதியம் தங்களுக்குத் தேவையில்லை என்று கூறினர். இருந்தபோதிலும், சிறை சென்ற காரணத்தால், பலர் தங்கள் பணியை இழந்து, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. ஓய்வூதியம் என்பதை வெறும் பணமாகப் பார்ப்பதைவிட கெளரவமாகப் பார்ப்பதே சிறந்தது. ஓய்வூதியத்துடன் சேர்த்து அவர்கள் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகையை உயர்த்த தற்போது எந்தத் திட்டமும் இல்லை. வருங்காலத்தில் இது குறித்து ஆராயப்படும் என்றார்.
நெருக்கடி நிலை காலத்தில், ஒரு மாதம் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும், அதற்கு மேல் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் ஓய்வூதியமாக அளிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT