இந்தியா

நீரவ் மோடி மனைவிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

DIN


பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை மும்பை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.
இந்த வழக்கில் ஆமி மோடிக்கு எதிராக அமலாக்கத் துறை அண்மையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ஆஸ்மி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தனது சர்வதேச வங்கிக் கணக்குகள் மூலம் 3 கோடி டாலரை (சுமார் ரூ.207 கோடி) ஆமி மோடி மாற்றியது பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டின் ஓர் அங்கம் என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
அந்தத் தொகையைப் பயன்படுத்தி, நியூயார்க் சென்ட்ரல் பார்க் பகுதியில் சொத்துகள் வாங்கப்பட்டதாக தனது குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் குற்றப்பத்திரிகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் ஆமி மோடிக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது நினைவுகூரத்தக்கது.
அந்தக் குற்றப்பத்திரிகையில், பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஸியும் போலியான கடன் பொறுப்பேற்புக் கடிதங்களைப் பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ.14,000 கோடி முறைகேடாக கடன் பெற்றதாகவும், இதற்கு சில வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2018-ஆம் ஆண்டு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரும் வரை நீரவ் மோடியின் குழும நிறுவனங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையிலிருந்து போலியான கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் அளிக்கப்பட்டதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னரே நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன்  பிரிட்டன் தலைநகர் லண்டன் தப்பிச் சென்றார்.
தற்போது அங்கு அவர் லண்டனின் முக்கிய பகுதியில் மாதம் 17,000 பவுண்ட் (சுமார் ரூ.15.5 லட்சம்) வாடகை குடியிருப்பில் ஆடம்பரமாக வசித்து வருவதாக பிரிட்டன் ஊடகங்கள் கடந்த வாரம் தெரிவித்தன.
இந்தச் சூழலில், நீரவ் மோடியின் மனைவிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் தற்போது ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT