இந்தியா

பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம்: மாலத்தீவுகள் உறுதி

DIN


எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் என்று மாலத்தீவுகள் உறுதி அளித்துள்ளது.
மாலத்தீவுகள் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனான சந்திப்பின்போது அந்நாட்டுத் தலைவர்கள் இதை தெரிவித்தனர். மாலத்தீவுகளில் கடந்த ஆண்டு நவம்பரில் இப்ராஹிம் முகமது சோலி தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, அந்நாட்டுடன் இருதரப்பு பேச்சு நடத்தப்படுவது இது முதல் முறையாகும்.
முன்னதாக, 2 நாள் பயணமாக மாலத்தீவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்த சுஷ்மா, அந்நாட்டு அதிபர் இப்ராஹிமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா அகமது டிதி, நிதியமைச்சர் இப்ராஹிம் அமீர் உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுஷ்மா, அந்நாட்டு உள்துறை அமைச்சர் இம்ரான் அப்துல்லாவையும் சந்தித்தார்.
முன்னதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹிதை சந்தித்த சுஷ்மா, இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவாகக் கலந்தாலோசித்தார். 
இந்தியாவுடனான நட்புறவுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த அப்துல்லா ஷாஹித், அனைத்து விவகாரங்களிலும் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட மாலத்தீவுகள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தியாவுக்கான பாதுகாப்பு விவகாரங்களில் மாலத்தீவுகள் தீவிர ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிராந்திய பாதுகாப்பு: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைக்கச் செய்வதன் முக்கியத்துவத்தை இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா-மாலத்தீவுகளின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் ஆமோதித்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் போன்ற குற்றங்களை ஒடுக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாலத்தீவுகள் உறுதிபூண்டுள்ளதாக அப்துல்லா ஷாஹித் கூறினார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அந்நாடு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT