இந்தியா

பிரதமர் மோடி ஏழைகள்,  விவசாயிகளின் நலனைப் புறக்கணித்து விட்டார்: ராகுல் காந்தி

DIN


பிரதமர் மோடி ஏழை, விவசாயிகளின் நலனைப் புறக்கணித்துவிட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
கலபுர்கியில் உள்ள என்.வி. பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, அவர் பேசியது:  பிரதமர் மோடி, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் ஏழைகள்,  விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யவில்லை. 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை அமல்படுத்துவோம்.  இந்த திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள்.  
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தைசச் செயல்படுத்தினோம். அது போல,  எந்த திட்டத்தையும் பிரதமர் மோடி செயல்படுத்தவில்லை.  இந்திய வரலாற்றில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  வேலையில்லா பிரச்னை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?  பண மதிப்பிழப்பு திட்டத்தைச் செயல்படுத்தி ரூ.1000, ரூ.500 செலாவணிகளை செல்லாததாக்கி மக்களை துன்பத்தில் ஆழ்த்தினார். இதனால் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தனர்.  தங்கள் பணத்தை எடுப்பதற்காக, ஏழைகள், சாதாரண மக்கள் வங்கியின் முன்பு,  வங்கியில் காத்திருந்தனர். 
இப்படி மக்களை இன்னலில் ஆழ்த்திய பிரதமர் மோடி, ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு தொழிலதிபர் அணில் அம்பானிக்கு சட்டவிரோதமாக உதவிசெய்துள்ளார்.  பிரதமர் மோடி ஏற்கெனவே தன்னை பாதுகாவலர் என்று அழைத்துக் கொண்டிருந்தார். தற்போது இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாவலராக மாற்றியுள்ளாராம்.  உண்மையில் பிரதமர் மோடி யாருக்கு பாதுகாவலர்? தொழிலதிபர்கள்  நீரவ் மோடி, விஜய்மல்லையா உள்ளிட்டோர் நாட்டைவிட்டு வெளியேறி,  அவர்களுக்கு பிரதமர் மோடி பாதுகாவலராக இருந்துள்ளார்.  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு நமது நாடு கண்டுள்ள மிகப்பெரிய ஊழலாகும்.  
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் காங்கிரசின் வழக்கம்.  2009-ஆம் ஆண்டு கலபுர்கிக்கு வந்தபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்-கர்நாடகப் பகுதிக்கு அரசியலமைப்புச்சட்டத்தின் 371(ஜே)பிரிவில் திருத்தம் கொண்டு வந்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியிருந்தோம்.  அதன்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஹைதராபாத்-கர்நாடகப் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனால், இப்பகுதியை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. 
ஆனால், 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளை திறக்க முக்கியத்துவம் அளிப்போம் என்றார் அவர். 
      இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பேசினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT