இந்தியா

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு : வதேரா மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

DIN


சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட  வழக்கை ரத்து செய்யக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 2016-ஆம் ஆண்டில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது, லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள ஒரு சொத்தை பண்டாரி, கடந்த 2010-ஆம் ஆண்டில் வாங்கிய விலைக்கே விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
அதைத் தொடர்ந்து, அவரது மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவின் உதவியாளர் மனோஜ் அரோராவுக்கும் இடையே மின்னஞ்சல் பரிமாற்றங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் லண்டனில் உள்ள சொத்தின் உண்மையான உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்றும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மூலம் அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, தில்லியிலும், ஜெய்ப்பூரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி வதேரா வாக்குமூலம் அளித்தார்.
இதனிடையே, தங்கள் மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் வதேராவும், அரோராவும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நீதிபதிகள் ஹிமா கோலி, வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, அந்த மனுக்களை தொடர்ந்து விசாரிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக விரிவான பதிலை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கைது செய்ய தடை நீட்டிப்பு: இதனிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்வதற்கான தடையை மே 27-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT