இந்தியா

பிரிட்டனை ஆதரித்த பாஜக தேசபக்தி பற்றி பேசுவதா?: மோடிக்கு மம்தா பதிலடி

DIN


சுதந்தரப் போராட்ட காலத்தில் பாஜகவின் முன்னோடிகள் பிரிட்டனுக்கு ஆதரவாக செயல்பட்டனர்; இப்போது தேசபக்தி குறித்துப் பேசலாமா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சேதான் மகாத்மா காந்தியை கொலை செய்தார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ரகுநாத்பூர் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பேசியதாவது:
அரசியலில் நான் யாருக்கும் தலைவணங்கி நின்றது இல்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்க அரசும் கொள்ளை கும்பலால் நடத்தப்படுவதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தேர்தல் மூலம் மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள். இந்திய ஜனநாயகம் மோடியின் முகத்தில் அறையும்.
மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை அனுமதிக்காததால் ஹிந்து மதத்துக்கு எதிராக நான் செயல்படுவதாக மோடியும், அமித் ஷாவும் குற்றம்சாட்டுகின்றனர். உலகப் புகழ்பெற்ற காளி பூஜையையும், நவராத்திரி திருவிழாவையும் நடத்தி வருவது நாங்கள்தான். இவர்கள்போல அரசியலுக்காக மதவாத கோஷத்தை நாங்கள் எழுப்புவது இல்லை.
தேசபக்தி குறித்துப் பேச பாஜகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்தான் பாஜகவின் முன்னோடிகள். இப்போது அந்த அவமானம் சிறிதும் இன்றி தேசபக்தி குறித்து பாஜகவினர் பேசி வருகின்றனர். மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்.
ராமர் கோயில் பிரச்னையை முன்வைத்து வளர்ந்த பாஜக, அதைவைத்து ஆட்சியையும் பிடித்தது. ஆனால், இதுவரை ராமருக்கு ஒரு சிறிய கோயிலாவது கட்டியிருப்பார்களா? நாட்டில் ஹிந்து-முஸ்லிம் இடையே பகைமையையும், வெறுப்புணர்வையும் வளர்த்ததே பாஜகவினர்தான். கடந்த 5 ஆண்டுகளாக முஸ்லிம்-கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள்-ஆதிவாசிகள் என பல்வேறு பிரிவினரிடையே பிரச்னையைத் தூண்டிவிட்டனர் என்றார் மம்தா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT