முகப்பு
இந்தியா

ரயில் தாமதம்: நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு எப்போது?

ஹம்பி ரயிலில் பயணித்து, ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மே 20ம் தேதி நீட் தேர்வை எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 8 மே, 2019 at 12:59 PM
பகிர்:

ஹம்பி ரயிலில் பயணித்து, ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மே 20ம் தேதி நீட் தேர்வை எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார்.

அந்த வகையில் ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் மே 20ம் தேதி நீட் மறு தேர்வு நடைபெறும் போதே, கர்நாடக மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 20ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும். மேலதிகத் தகவல்களுக்கு மாணவ, மாணவிகள் www.ntaneet.nic.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.  

ஹுப்பள்ளியில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட ஹம்பி விரைவு ரயிலில் வடகர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக பயணித்தனர். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு பெங்களூரு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், 8 மணி நேரம் தாமதமாக நண்பகல் 2.37 மணிக்கு வந்து சேர்ந்தது.

ரயில் தாமதமாக வந்ததால், புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருந்த தேர்வு மையங்களுக்குச் செல்லமுடியாமல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 

தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமய்யா சுட்டுரையில் பதிவிட்டதுடன், பிரதமர் நரேந்திர மோடியின் சுட்டுரைப் பக்கத்திலும் அதனை இணைத்திருந்தார். இந்நிலையில், கர்நாடக மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.