இந்தியா

சொத்துகள் குவித்ததாக நிரூபிக்க முடியுமா?: எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால்

DIN


சொத்துகள் குவித்திருந்தால், அதை நிரூபிக்க முடியுமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பலியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து மோடி பேசியதாவது:
பினாமி சொத்துகள், பண்ணை வீடு, பங்களா அல்லது வணிக வளாகம் அல்லது வெளிநாட்டு வங்கியில் பணம் டெபாசிட், வெளிநாட்டில் சொத்து அல்லது லட்சக்கணக்கான ரூபாயிலோ, கோடிக்கணக்கான ரூபாயிலோ கார்கள் நான் வாங்கியிருந்தால், அதை நிரூபிக்கும்படி கலப்பட கூட்டணிக்கு வெளிப்படையாக சவால் விடுக்கிறேன். என் மீது அவதூறுகளை தெரிவிப்பதை விடுத்து, தைரியம் இருந்தால், இந்த சவாலை ஏற்கும்படி கலப்பட கூட்டணியை கேட்டுக் கொள்கிறேன்.
வசதிப்படைத்தவராகவோ அல்லது ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் பாவத்தை செய்ய வேண்டும் என்ற கனவோ எனக்கு கிடையாது. ஏழை மக்களின் நலன், தாய்நாட்டின் மீது மரியாதை மற்றும் தாய்நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறேன். இந்த காரணத்தினால்தான், பாகிஸ்தானின் அகந்தையும், அந்நாட்டின் பயங்கரவாதிகளும் காணாமல் போனார்கள்.
பாகிஸ்தானின் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாதிகள், தற்போது பூமிக்கடியில் மறைந்து கொண்டு, இந்தியாவில் மோடி ஆட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் தங்களது அமைதியையும், தூக்கத்தையும் இழந்து விட்டனர்.
நமது நாட்டின் வீரர்களுக்கு, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் நான் முழு சுதந்திரம் அளித்து விட்டேன். இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான நமது நாட்டின் நடவடிக்கையானது, எல்லைத் தாண்டி சென்றுவிட்டது. நமது பாதுகாப்புப் படை வீரர்களின் சாகசம் குறித்து கலப்பட கூட்டணி கேள்வியெழுப்புகிறது. உள்ளூரில் ரௌடிகளை அடக்க முடியாத இக்கூட்டணியால், பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்?
ஒட்டுமொத்த உலகமும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதலால் தில்லியில் (மத்தியில்) வலுவான அரசும், திருப்திபடுத்துதல் மற்றும் வாக்குவங்கி அரசியலில் நம்பிக்கையில்லாத, துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய அரசும் அமைவது  அவசியமாகும்.
காஸிபூரில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, அவதூறு தெரிவித்துள்ளனர். தேர்தல் இன்னமும் முடியவில்லை. அதற்குள் தங்களது கணக்கை தீர்த்து கொள்ளும் வகையில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். என் மீது அவதூறு தெரிவிக்கும் கலப்பட கூட்டணி கட்சிகளுக்கு, தேர்தலில் மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும்.
நான் குஜராத் முதல்வராக நீண்டகாலம் பதவி வகித்துள்ளேன். ஏராளமான தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளேன். நான் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில்தான் பிறந்தேன். ஆனால் நாட்டை உலகின் முதன்மை நாடாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறேன் என்றார் மோடி.
வாராணசி வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்: இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் தாம் போட்டியிடும் வாராணசி தொகுதி வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து மோடி விடியோ வெளியிட்டுள்ளார். 
அதில் அவர், தம்மை காசி வாசி என்று குறிப்பிட்டிருப்பதுடன், மக்களவைக்கு தொடர்ந்து 2ஆவது முறையாக தேர்வு செய்யும்படி அத்தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT